Monday, 13 August 2012

kurukkalaanji - My first short story

               !!குருக்கலாஞ்சி!!

 அதோ அந்த வளைவைக் கடந்து அவனது சைக்கிள் தெருவினுள் நுழைந்தது.அவன்பெயர் குருக்கலாஞ்சி,  அவ்வூர்க் கணக்குப்பிள்ளை பிரமநாயகம் பிள்ளையின்ஒரே கிராம உதவியாளன். கணக்குப்பிள்ளை தான் அவனுக்கு எசமான் .அந்த உயர்ந்த படிக் கட்டுகளுடைய வீட்டின் எதிர்புறமிருந்த விளக்குக் கம்பத்தில் வண்டியைச் சாய்த்துப் பூட்டி சாவியைப் பத்திரமாய் இடுப்பில் கிடந்த பழுப்பேறிய கயிற்றில் பிணைத்தான்.ஒரு  நொடி எதற்கோ தயாராவது போல் பூட்டியிருந்த பெரிய தலைவாசல் கதவை வெறித்து விட்டு அதனனருகில் தள்ளாடிச் சென்றான். நெடிய அந்த மெலிந்த உருவம் கதவை ஓங்கித் தட்டி, ஆச்சி! ஆச்சி! என்று உரக்க அழைத்தது .

அவனால் ஆச்சி என்றழைக்கப்பட்ட கணக்குப்பிள்ளையின் மனைவி பார்வதியம்மாள் பின்கட்டிலிருந்து பதைபதைப்புடன் வந்து கதவைத் திறந்தாள்.அவனைக் கண்டு  பதைபதிப்பு நீங்கியது ஆனால் வியப்படைந்து முகம் சுழித்தாள். ஆம்! அவனிடமிருந்து வந்த மிகுதியான  சாராய நெடி அவ்விதம் அருவருப்படையச்  செய்தது. ஆச்சியின் முகத்தை நேரிடாமலேயே ஆச்சி, "எசமான வரச் சொல்லுங்க, நான் ஒண்ணு சொல்லணும்" என்று குளறினான். ஆச்சி "ஏன்டா குருக்கலாஞ்சி இத்தனை காலையிலேயே இப்படிக் குடிச்சிட்டு வந்து அவுகளக் கேக்க?!..போ அவுக வையப் போறாக"   என்று பரிதாபம்  நிறைந்த குரலில் கூறினாள்.  இதற்குள் பிரமநாயகம் பிள்ளை வாசலை அடைந்தார்.அவனைப் பார்த்ததுமே ஏற்கனவே அவரது மூக்குக்கண்ணாடியின்  வழி பெரிதாய்த் தெரிந்த விழிகளை மேலும் பெரிதாக்கி "காலங்காத்தால உனக்கு என்னடே வேணும்?" என்று  கோவமாய் இரைந்தார்.

அவன் இப்போது வாயிற்படியில் இருந்து தெருவில் இறங்கினான்.தான் மிகவும் மதிக்கும் தன் எசமானை நேரிட்டுப் பார்த்தான்.ஒருவகைக் கதம்ப உணற்சியினால் அவன் முகம் அவரைப்  பச்சாதாபம் கொள்ளவே செய்தது. விழிக் குளங்கள் உடைந்து அவன் கன்னங்களில் ஓடி மேல்சட்டையை நனைத்தது.பிரமநாயகம் இதென்ன ஏதும் விபரீதம் நிகழ்ந்து விட்டதோ? என்றெண்ணி விக்கித்து அவனைக் கனமற்ற ஒரு தீர்க்கப் பார்வை பார்த்துக்கொண்டிருக்கையில் விரக்தியான புன்னகையொன்றை உதிர்த்தான்.கலங்கிய கண்களுடன் "எசமான்,எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்" என்ற பாடலை வசனமாய்க் குழறித்  தள்ளாடி அந்த சாக்கடையின் விளிம்பில் கீழே விழுந்தான்.இதைச் சொல்ல ஏன்  இவன் இத்தனை காலையில் குடித்துவிட்டு வர வேண்டும்? என்று யோசித்த பிரமநாயகதிற்கு 2 நாள் முன் நடந்த நிகழ்ச்சி சுருக்கென்றது.

கணக்குப்பிள்ளைக்கு ஒரே பெண் பிள்ளை, ஆச்சிக்குத் திருமணமாகி குறைய ஆண்டுகள் கழித்து சற்று தாமதகமாவே பிறந்த குழந்தை மஞ்சு. கிராமக் கணக்குகளை பிரமநாயகத்தின் வீட்டிலேயே வைத்து எழுதுவதும், பின் அதைக் கோர்த்துத் தைப்பதும்,  ஆச்சியும் மஞ்சுவும் சொல்லும் இதர வேலைகளைச் செய்வதுமே குருக்கலாஞ்சியின் தினப்படி அலுவல்களாகும் . அன்றும் வழக்கம் போல் வீட்டின் முன்கட்டிலிருந்த அந்தச் சிறிய எழுது மேசையின் மீது கணக்குகளை வைத்து எழுதிக் கொண்டிருந்தவன் உள்ளிருந்து வந்த மஞ்சுவின் வீல் என்ற அலறலையும் அதைத் தொடர்ந்த அழுகையையும் கேட்டுப் பதறி கூடத்திற்குள்  வந்தான். அங்கே மஞ்சுவின் எட்டாம்  வகுப்பு  அரையாண்டுக்  கணித விடைத்தாள் பிரமநாயகத்தின் கையிலும், அவரது வலது கை விரல் தடம் ஐந்தும் மஞ்சுவின் கன்னத்திலும் இருந்தன. இதைக் கண்டதும்  "இப்படியா வளந்த பிள்ளைய அடிப்பாக?..அதுவும் பொம்பளப் புள்ளைய?!" என்று நிஜமான கோவத்தோடே குருக்கலாஞ்சி கேட்டான். பிரமநாயகம் , "பிள்ள வளக்கதப் பத்தி உனக்கேன்னடே தெரியும்? போய் வேலையைப் பரு" என்று இரைந்தார்.  ஒரு நொடி தன்னை யாரோ  நடு  வீதியில் நிர்வாணமாக்கி விட்டதைப் போல் கூசி நின்றான்.          ஆம்! குருக்கலாஞ்சிகும் அவன் மனைவிக்கும் திருமணமாகிப் பத்தாண்டுகளுக்கு மேலாகியும் குழந்தைப் பேறு இல்லை. தனது இந்தத் தீரா மனவேதனையை நேரிடையாய்ச்  சொல்லி அவர் தன்  வாயடைக்கக் கூடும் என்று சற்றும் எதிர்பார்த்திராத அவன்  வெட்கி அவ்வீட்டை விட்டு வெளியேறினான். இதற்குள் ஆச்சி அழுதுகொண்டிருந்த மஞ்சுவை வீட்டின் உட்கட்டிற்குள் அழைத்துச் சென்றாள். அடுத்த 2 தினம் அந்தப் பக்கம் அவன் வரவில்லை.

அவரது மனதிற்குள் இத்தனையும்  ஓடிக்கொண்டிருந்த வேளையில் கணக்குப்பிள்ளையின் தந்தை சட்டநாதன் பிள்ளை "அவனைத் தூக்கி அந்தப் பக்கம் போடுங்கப்பா, சாக்கடைக்குள்ளே விழுந்து தொலயப்போறான்" என்று சொல்லிவிட்டுத்  தன் மருமகளை ஒரு பார்வை பார்த்தார். பார்வையின் அர்த்தம் விளங்கி ஆச்சி வீட்டுக்குள் நகர்ந்தாள். பிரமநாயகமும் மற்றும் இருவர் சேர்ந்து அவனைத் தூக்கி அருகிலிருந்த இடிந்த பழைய வீட்டின் முற்றத்தில் கிடத்தினார்கள். அப்போது அவன் முழங்கால் வரை கால்சட்டை அணிந்திருப்பதையும் சைக்கிளின் சாவியைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதையும் கவனித்தார். தான் செய்த அவமானத்திற்கு ஞாயம் கேட்கத் தயாராய்த் தான் வந்திருக்கிறான் என்றும் துணைக்கு சாராய போதையையும் அழைத்து வந்திருக்கிறான் என்றும் மனதிற்குள் எண்ணிக்கொண்டார். குருக்கலாஞ்சி இலேசாக ஏதோ மெல்லிய குரலில் முனகினான் "எசமான், எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் பார்த்து சிரிப்பான்".