!! கரடியும் சீஸரும் !!
1995 ல brain-o-brain, abacus லாம் அவ்வளோ பேமஸ் ஆகாததால அஞ்சாங்கிளாஸ் படிச்சுட்டிருந்த குமாரு ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு காலைல வீட்ல இருந்தான்.இத்தனை காலையில், தெருவின் எல்லா நாய்களும் குரைப்பதையும் ஊளையிடுவதையும் கேட்டு வாசலுக்கு ஓடினான் . கிட்டத்தட்ட தெருவாசிகள் எல்லாரும் வாசலில் நின்றிருந்தார்கள்.
ஜானியும் சீஸரும் பெருங்குரலெடுத்துக் குரைத்துக்கொண்டிருந்தது. ரெண்டும் கஸ்டம்ஸ் ராமநாதன் வீட்டுக் காவலாளிகள் , செல்லப்பிள்ளைகள் எல்லாமே. கலப்பில்லாத ஜெர்மன் ஷெப்பர்டும், டபார்மனும். பிள்ளைகள் எல்லாரும் வெளிநாடுகளில் இருப்பதால் ராமநாதனுக்கும் அவரது மனைவிக்கும் இது ரெண்டும் தான் எல்லாமே.அவரர்களிருவரும் ஜானிக்கும்,சீஸருக்குக்காகவே எங்கும் வெளியில் செல்வதில்லை.
அந்தத் தெருவுலேயே பெயருள்ள நாய் இதுகள் தான். மத்ததெல்லாம் தோ..தோ...தோ...ச்சு....ச்சு...ச்சு...தான். அதுசரி நாய்க்குப் பெரு வேணும்னா நல்ல இனத்துல பொறக்கணும்ல.
விசயம் இதான், தெருக்குள்ள கரடி வந்துருச்சி. கரடி தனியா வரல்ல, ஆளோட வந்துருக்கு. கரடி கழுத்துல சங்கிலி, அத அவன் தான் கையில ஒரு வளையத்தோட மாட்டி வச்சுருந்தான். நல்ல கெட்டிச் சாக்கொண்ணு தோளில், அது மேல ஒரு மெலிஞ்ச கொரங்கு . குமாரு கரடியை நேரில் பாத்ததில்லை. ஆனால் "ஆபத்துக்குதவாத நண்பனை நம்பாதே"ன்னு கரடி அறிவுரை சொல்ற கதையில், படத்தில் பார்த்திருக்கிறான்.
பக்கத்து வீட்டுக் கர்ணன் மாமாவும், அவரது ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மகள் வாணியும் வாசலில் நின்றார்கள். கரடியையும் அந்த ஆளையும் யாரும் நெருங்கவேயில்லை, வாசலிலிருந்தே எல்லாரும் பார்த்தனர். அவன் மையமாக "தாய்த்து....கரடி கடிச்சு மந்திரிச்ச தாய்த்து....ஜாம்பவான் குடுக்கற தாய்த்து....ஒண்ணு ஆர் ரூவா , ரெண்டு பத்து ரூவா....எப்பவும் கெடைக்காது இந்தத் தாய்த்து....சின்னப்பிள்ளைக்கு கெட்டுனா சீரடிக்காது...ஆம்புளைக்கும்,பொம்புளைக்கும் ஆரோக்கியம் கிட்டும்....காத்து கருப்பு கிட்ட வராது ....தாயத்தே ... ஒண்ணு ஆர் ரூவா , ரெண்டு பத்து ரூவா....எப்பவும் கெடைக்காது"...
ஒருத்தர் ஒண்ணு கேக்க ஒரு தாயத்து எடுத்து தூக்கிப்போட்டான் , கரடி வாயாலேயே பிடிச்சு உடம்பையும் தலையையும் வேக வேகமா ஆட்டி (மந்திரிக்குதாம்) "ப்ப்பூ" னு மேல்நோக்கி துப்புனதப் புடிச்சு, அதோட கயிறொண்ணும் குடுத்து..."ஆர்ரூவா...அய்யாவுக்கு இனி எல்லாம் செயந்தான்...ஆர்ரூவா" ன்னான்.
அவன் கையில ஒரு கம்பு கூட இல்ல, ஆனா கரடி நல்ல பிள்ளையா கூடவே போகுது. குமாரு அப்போ தான் பாத்தான் ,அவன் தோளில் அது குரங்கு இல்ல, குரங்குக்குக் கண்ணு சின்னதா மினுக்கிக்கிட்டே இருக்கும். இதுக்கு கண்ணு பெருசா, வாய் கொஞ்சம் ஊசியா, சொல்ல முடியாத சோகத்தோட இருந்துச்சு. அது என்னது மாமா ன்னு குமாரு கர்ணன் மாமா கிட்ட கேட்டான். அது "தேவாங்கு" டா ன்னு சொல்லவும், அப்பா "ஒழுங்கத் தின்னுட்டு ஊக்கமா இரு, தேவாங்காட்டம் இருக்காத"ன்னு சொன்னத நெனச்சு நா இப்படியா இருக்கேன்? னு யோசிச்சான்.
தாயத்து விக்கிறவன் நடைக்கேத்தபடி வேகத்தக் கூட்டியும் குறைச்சும் நடந்தது கரடி. கஸ்டம்ஸ் வீட்டுக்குப் பக்கம் வந்ததும் சீஸர் (டாபர்மேன்) பயங்கரக் குரைப்புடன் காம்பௌண்ட் சுவத்து மேல கால வெச்சு வெளிய பாஞ்சு கரடியை விரட்ட முயற்சித்துக் கொண்டிருந்தது. மற்ற தெரு நாய்கள் வாலைக் காலிடுக்கில் விட்டு ஒரே ஊளை.
ஆனால் கரடி எதையும் பொருட்படுத்தாத ஒரு அலட்சிய உடல் மொழியை வெளிப்படுத்திக் கொண்டே முன்னும் பின்னும் அசைந்தசைந்து சென்றது. சீஸரும், ஜானியும் வீதியில் யானை வரும் போது எப்போதும் காலிடை வாலாகப் பம்மி விடும், ஆனால் கரடியைக் குரைத்து விரட்ட நினைத்தது ரெண்டும்.
எதிர்பாராத நொடியில் சீஸர் சுவற்றைத் தாண்டி கரடி முன் வந்தது. கிட்டத்தட்ட நான்கடி உயரம், காலை நடையில் ராமநாதனை இழுத்துக்கொண்டு செல்லும் போது ,எதிர்ப்படும் யாரும் ஒதுக்குவார்கள். தெரு நாய்கள் முனகலோடு பம்மி விடும்,சிறு குரைப்பு கூட இருக்காது.
கரடி தன் இரு காலில் சாவதானமாக நிமிர்ந்து நின்றது, ஆறடி உயரம். யாரும் அது நான்கு காலில் நடந்து கொண்டிருந்த போது இத்தனை உயரமிருக்கக்கூடுமென்று நினைத்திருக்க மாட்டார்கள். தனது இரு பெரிய தொங்கும் கைகளையும் வேகமாக ஆட்டி சீஸரைப் பார்த்து உரக்க உறுமியது. சீஸர் காதை மடித்து காலிடை வாலாகப் பம்மி படுத்து தீனமாக முனக ஆரம்பித்துவிட்டது. கரடிக்காரன், "ஜம்பு....ஜம்பு" என்றான், மீண்டும் நான்கு காலில் வந்து தலையையும், உடலையும் ஆட்டிக் கொண்டே உறுமலைக் குறைத்தது. அவன் மீண்டும் "தாய்த்து....கரடி கடிச்சு மந்திரிச்ச தாய்த்து....ஜாம்பவான் குடுக்கற தாய்த்து....ஒண்ணு ஆர் ரூவா , ரெண்டு பத்து ரூவா....எப்பவும் கெடைக்காது இந்தத் தாய்த்து....சின்னப்பிள்ளைக்கு கெட்டுனா சீரடிக்காது...ஆம்புளைக்கும்,பொம்புளைக்கும் ஆரோக்கியம் கிட்டும்....காத்து கருப்பு கிட்ட வராது ....தாயத்தே ... ஒண்ணு ஆர் ரூவா , ரெண்டு பத்து ரூவா....எப்பவும் கெடைக்காது"...என்று சென்றான்.
சீஸரை ராமநாதன் இழுத்துச் சென்று காம்பௌண்ட்டிற்குள் விட்டார். வெகு நேரம் அது நடுக்கத்துடன் முனகிக் கொண்டே இருந்தது. ஜானி தலையைத் திருப்பி அமைதியாய் மெதுவான வாலாட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. குமாருக்கு கரடி புன்னகைத்துக் கொண்டே கரடிக்காரனைக் கூட்டிச்செல்வது செல்வது போலிருந்தது.மேலும் அந்தப் பையனுக்கு அறிவுரை சொன்ன கரடி இதுவாகத் தானிருக்குமென நினைத்துக்கொண்டான்...