!! தாயம் !!
எப்போ கல்யாணம்?, எங்க சபையா? உங்க சபையா?, மத்தியானம் சாப்பாடு கோழியா? ஆடா? இப்படி எல்லா விஷயத்தையும் பேச மேரி வீட்டாளுகளும் தோமாவின் வீட்டாளுகளும் கூடிப்பேசி முடிவு செய்ய ஏற்பாடு. மேரிக்கும் தோமாவுக்கும் ஏசுவும் மாதாவும் ஒண்ணுதான்,ஆனா பாஸ்டரும் சபையும் வேற. மேரி "ரெபாக்கா சுவிசேஷ மன்றம் " தோமா "பெராக்கா சுவிசேஷ மன்றம் ". ஞாயிறு தோறும் ரெண்டு சபையும் தட்டி முழங்கி ஏரியா ல எல்லார் காதையும் கிழிக்கிறதான் வேலை. ரெண்டு சபையும் ஒரே தெருவுல ஓரோர் முனைல இருக்கு.
பொட்டோ நகையோ இல்லாத துலக்கிய களையான முகமும்... மை பூசாமலேயே பெரிதாய்த் தெரியும் மான் விழியும் கொண்ட.. சிவகாசி டெக்ஸ்டைல் கம்பெனி ல வேலை பாக்குற மேரியும், சுருக்க வெட்டின தலைமுடியும், களையான முகமும்... யாரையும் சிநேகமாய்ப் பார்க்கும் குணமுடையவனுமான...ராஜபாளையத்துல ஒரு மில்லுல பிட்டரா இருக்குற தோமாவும் ( Thomas தான்தோமா ) அதிகம் பாத்துக்கிட்டதெல்லாம் கூட இல்ல, ஆனா லவ்வு வந்தது சுடுகாட்டு அடிபம்பு புண்ணியத்துல.
2000 - 2001 ரெண்டு வருஷமா மழை தாயம் போடவே இல்ல விருதுநகர் மாவட்டத்துல. சீல்த்தூர்லயே (ஸ்ரீவில்லிப்புத்தூர்) வாரத்துக்கொருக்கா ஒரு வீட்டுக்கு 2 குடம் குடிதண்ணி தான் நகராட்சி ஏற்பாட்டுல. நகராட்சி லேயே இந்தப்பாடு, பஞ்சாயத்துனா கேக்கணுமா? தண்ணி ப்பஞ்சம் திங்கு திங்கு னு ஆடுது. காதிபோர்டு, திருவண்ணாமலை ரெண்டு பஞ்சாயத்தும் சேத்து மொத்தம் எம்பது வீடு, நண்டு சிண்டு சேத்து 250 உருப்படி இருக்கும். பஞ்சாயத்து போர்ல தண்ணி ஒரு வாரம் ஊறுனா ஒரு நாள் அரை மணி நேரம் தண்ணி வரும், தனி கனக்சன் யாருக்கும் கெடயாது எல்லாம் தெருக் குழாய் தான். ஒரு சொட்டுக் கூட வீணாகம வீட்டுக்கு 4-5 குடம் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமா அதும் போச்சு. பள்ளிக்கூடத்துக்கும், மில்லுக்கும், வேலைக்கும் போற எல்லாரும் முகம் கழுவி மட்டும் போக வேண்டியதாச்சு.துணி துவைக்க ரொம்பவே அலைய வேண்டி வந்தது. அழுக்குத் துணி சுமக்கிறது கஷ்டமே இல்ல, ஆனா நனைசச்சு சுமக்கிறது கஷ்டம். ஊரே நனைச்சு சுமந்தது சைக்கிள்லயும், தலைலையும்.
ஆனா மாரிமுத்து அண்ணன யாரும் அப்பிடிப் பாக்கவே இல்ல, முத ஷிப்டுக்குக் குளிச்சுத் திருத்தமா காக்கிச்சட்டை பேண்ட் போட்டு இடையில கம்பி வைக்காத லேடிஸ் சைக்கிள்ல சிலை மாதிரி மூஞ்சிய வச்சிக்கிட்டுப் போவாப்புல. த. நா அரசுப்பேருந்துல கண்டக்டர். பஸ்ல தெரிஞ்ச ஆளு யாரு வந்தாலும், பொண்டாட்டியோ புள்ளைங்களோ வந்தாக் கூட அண்ணன் சிரிக்க மாட்டாரு. பஸ் பாஸ் செக் பண்ற ஒரே கண்டக்டர் அவரு தான் அந்த ரூட்ல. சீல்த்தூர்லர்ந்து இவர் ஓடுற பஸ்ல எவனும் ஏற மாட்டான். பஸ் பாஸ் வச்சிருந்தாலும் ஏண்டா கிளிஞ்சிருக்கு, போட்டோல கையெழுத்து அழிஞ்சிருக்குன்னு வைவாப்புல, நடக்கும் போது புத்தகப்பை இடிச்சா முறைச்சுப் பாத்து இறக்கி வைடாண்ணு அரட்டுவாப்ல, எல்லாத்த விடவும் ஸ்டாப்பிங் ல கால் இறங்குற முன்னாடி விசில் அடிப்பாரு. இவரப் பத்தி தெரிஞ்ச டிரைவர் னா நிண்ணு போவாங்க, புதுசுண்ணா விழுத்தாட்டிருவான்.
சரி தண்ணிப்பஞ்சத்துக்கு வருவோம். யாருக்குமே விளங்கல, அண்ணன் எப்புடி சமாளிக்காருண்ணு. எல்லாரும் மண்டையைச் சொறிஞ்சு யோசிச்சும் ஒண்ணும் தெரியல. ஊருக்கெல்லாம் ஐடியா குடுத்துட்டிருக்குற உள்ளூர் வருத்தப்படாத வாலிபர் ஜான் அண்ணன் தான் கண்டுபுடிச்சாப்புல. மாரிமுத்து அண்ணன் விடிகாலை 3 மணிக்கெல்லாம் லோடு கேரியர் வச்ச சைக்கிள்ல பக்கத்துக்கு ரெண்டும் மேல ரெண்டும் 6 குடம் வச்சு 4 நடை, கடைசி நடைல குளிச்சுத் தொவச்சு 4 கொடம் கூடைல நனைச்ச துணியுமா வர்றத தூக்கம் வராத ஒரு நாள் பாத்து சொல்லவும், எங்க போயி தண்ணி எடுக்காருன்னு ஒரு ஊகம் எல்லாருக்கும் கிட்டிப்போச்சு.
தோட்டம், பம்புசெட்டு, ஊரணினு தண்ணி தேடி வடக்கயே போச்சு ஊரு. அண்ணன் மேற்க போயி சுடுகாட்டுல போட்ருக்க அடிபம்புல தான் நெதம் குளிப்பு,தொவைப்பு எல்லாம். வீட்டுத்தொட்டியையும் கொறையாயாமப் பாத்துருக்காரு.
முதல்ல எல்லாருக்கும் ஒருமாதிரி சுருக்குன்னு இருந்தது. சுடுகாடு ஊருக்கு மேற்கே ஒரு ஓடைய ஒட்டி இருக்கும். அந்த ஊரில் எரிக்கும் வழக்கமுடைய எல்லாருக்கும் அது தான் சுடுகாடு. ஊருலேர்ந்து பால்காரர் தோட்டம் தாண்டி சின்ன வாய்க்கால் ஒண்ணத்தாண்டி அங்கொண்ணும் இங்கொண்ணுமா வளர்ந்திருக்குற பனைமரப் பொட்டலத் தாண்டி இருக்குற விழுதுகள் மண்டிய ஆலமரத்துக்குக் கீழதான் மொட்டையடிச்சுக் கொள்ளி வைக்கப் போகணும். ஓடை காஞ்ச சமயத்துல சிதைக்குக் குழியெடுக்க, ஈமச்சடங்குக்குத் தண்ணியெடுக்க, சாவுக்கு வந்தவர்கள் குளிச்சிட்டு அங்கிருந்தே கிளம்பன்னு எல்லாத்தயும் யோசிச்சு பழைய பிரசிடெண்ட் போட்ட அடிபம்பு. கறுப்புப் பெயிண்ட் அடிச்சா மண்ணுல பொதஞ்ச பாதி சிவலிங்கம் மாதிரித் தோணும். இது போக அந்தப்பக்கம் உள்ள ஆட்டுப்பட்டி ஆடுகளுக்கெல்லாம் மண்ணுல அணை வச்சுத் தண்ணி காட்டவும் தான் அதான் உபயோகம். முதல்ல எல்லாரும் யோசிச்சாலும் ஒவ்வொருத்தரா தண்ணிக்குப் போக ஆரம்பிச்சாச்சு.கொளுத்துற வெயிலுக்குப் பயந்து பெரும்பாலும் பகல்ல யாரும் போறதில்ல, வெயில் தாழ சாயங்காலம் ரெண்டாவது மில் சங்குக்குப் பிறகு சைக்கிள்,குடத்தக் கட்டுற சைக்கிள் செயின், வசதிக்கேற்ப ரெண்டு இல்லேன்னா மூணு கட்ட பேட்டரி லைட்டோட படையெடுப்பு தொடங்கி விடிகாலை முதல் சங்கு வரை தொடரும். வாய்க்கால் வரைக்கும் சைக்கிள்ல போகலாம், பொட்டல்ல டயர் பதியும், உருட்டிட்டு தான் போணும்.
கிட்டத்தட்ட ஊரே முறை வச்சு தண்ணியெடுக்க ஆரம்பிச்சது, "ரெபாக்கா", "பெராக்கா" மக்கள் உட்பட. சிதை இருந்தா அன்னிக்குக் கொஞ்சம் கிரீஸத் தேச்சுட்டு அடிபம்பு ரெஸ்ட் எடுக்கும். அடிபம்புல சோர்வாகாமத் தண்ணி அடிக்க ஓங்கி ஓங்கி அடிக்கக் கூடாது, ஒரே சீரா இடைவெளி இல்லாம அடிக்கணும். டங்கு டங்குன்னு அடிச்சா வாசர் போயிரும். இதெல்லாத்தையும் ரெண்டே நாள்ல யாரும் பேசாமலேயே நடைமுறை ஆயிருச்சு. அங்கேயே துணி துவைக்கவோ குளிக்கவோ கூடாதுங்குறதும் யாரும் சொல்லாமலேயேஅமலாயிருச்சு.
கூட்டம் இருக்கப்ப ரெண்டாள் இருந்தா நல்லது, முதல் நடை ரெண்டு குடத்தை ஊத்திட்டு வரும்போது அடுத்த நடைக்குக் குடம் முன்னால் நகர்ந்திருக்கும் இல்லாட்டி பிடித்து அடுத்த வரிசைக்கும் நிக்க முடியும். இந்த ஏற்பாட்டுக்குத்தான் மேரி அப்பாவோடு வர ஆரம்பித்தாள்.
மேரியும் அப்பாவும் மூணு நடை , மூணாவது நடைல மேரி இடுப்புல ஒரு குடம் வச்சுப் பாதி தூரம் போக அப்பா திரும்பி வந்து சைக்கிள் ல கூப்பிட்டுப் போறது தான் பதிவு. அன்னிக்கு சனிக்கிழமை ராத்திரி மணி மூணாயிருச்சு கடைசி நடைக்கு. கடைசி நடைத் தண்ணி தூக்கிட்டுப் போகும் போதுதான் இருட்டுல ஒரு உருளைக் கல்லுல கால வெச்சதுல கால் எசக்கேடா பெரண்டு போச்சு. ஆனாலும் தண்ணிக்குடத்தப் பத்திரமா இறக்கி வச்சுட்டா ,மேரி.
பொட்டல்ல பின்னாடி வந்த தோமா சைக்கிள வேகமா உருட்டிகிட்டே கிட்ட வந்தான்.என்னாச்சு? பாத்து வர வேண்டாமா? ன்னான். அதுக்குள்ளே அவளுக்கு வலில கண்ணீரே வந்துருச்சி. சைக்கிள நிறுத்தி அவன் குடத்தையும் இறக்கி வச்சுட்டப் பின்னால உக்காரு நான் கூட்டிட்டு போறேன்னான். இல்ல எங்கப்பா வந்துருவாருங்க நீங்க போங்கன்னா. இருக்கட்டும் வழில வந்தா ஏறிப்போ...இப்போ உக்காரு உன் காலு வீங்குது, எலும்புல நல்ல அடி விழுந்திருக்குன்னான் தோமா. வலி உயிர் போனது, கர்த்தாவேன்னு சைக்கிள்ள ஏறிட்டா. வாய்க்கால் தாண்டி தோமா சைக்கிள மேல ஏறி மிதிச்சான். பால்காரர் தோட்டம் தாண்டவும் மேரியோட அப்பா எதுக்க நடந்து வர்றதைப் பாத்து தோமா நிப்பாட்டி இறங்குனான். மேரி நல்லாவே அழுதுட்டிருந்தா. என்ன என்னாச்சுன்னு அவரு பதற, தோமா நடந்ததச் சொன்னான். காலு வீங்கிருக்கு, இப்பமே கட்டுப் போட்டா நல்லதுன்னான். மேரியின் அப்பா, அய்யோ சைக்கிள் வேற பஞ்சராயிருச்சேன்னு முகத்தைத் தொங்கப் போட, பக்கத்துல தான வைத்தியம் பாக்குற ஆசாரி வீடுண்ணும், நான் கொண்டு போறேன் நீங்க வீட்ல கூட்டிட்டு வேகமா வாங்கன்னு சொல்லிட்டு சைக்கிள ஏறி மிதிச்சான்.
காலத் தொங்கப் போட்டிருந்தது வலியைக்கூட்டிருந்தது வைத்தியர் வீட்டைப் போய்ச் சேர்ந்த போது. மேரி இறங்கி என்னால காலூன்ற முடியாதுன்னு சைக்கிளப் பிடிச்சு ஒத்தக்காலத் தூக்கி நின்னுட்டா , தோமா போட்ட கூப்பாட்டுல வைத்தியர் ஜன்னல் வழி வெளிய பாத்து, வந்து கதவைத் திறந்து நடந்துருவியாம்மா?ன்னார். பிறகு அவரே காலப் பாத்துட்டு ஊணாம நொண்டியே வரச் சொன்னாரு. மேரி அம்மா வரட்டும்னா, தோமா என் தோளப் பிடிச்சு வாண்ணு கறாரா சொல்லவும் அவனைப்பிடிச்சு பெஞ்சில உக்காந்துட்டா. அதுக்குள்ள அவ அம்மா அப்பா ரெண்டாளும் வந்தாச்சு, வைத்தியர் பாத்து ,கணுக்கால் எலும்பு நூலிழை விலகிருக்கு எடுத்து வச்சு கட்டுனா மூணு நாள்ல நடந்திருவான்னு சொல்லி, அம்மா நீங்க அவ தோளைக் கையோட அழுத்திப்பிடிங்க,எடுத்து வைக்கும் போது என்னயப் பாக்காப் பிடாதுன்னாட்டார்.
கால்ல எண்ணை ஊத்தி தேச்சுக் கையத் தொடச்சுட்டு, கட்ட வெரலைப்பிடிச்சு இழுத்துக் கணுக்காலை நகட்டி எடுத்து வச்சிட்டார் ஆசாரி. மேரி அடிவயித்துலேர்ந்து ஒரு அவையம், அப்பிடியே மயங்கிட்டா. வைத்தியர் கையிலிருந்த முரட்டுத்தனம் அவரு முகத்துல தெரியவே இல்ல. ஒரு முழு வேட்டியக் கிழிச்சு இறுக்கி ஒரு கட்டு. வீக்கம் வத்துனா கட்டு இளகும், கட்டு இளகுனதுக்கப்புறம் வரச்சொன்னார். காலைல வந்துருந்தா சிக்கலாகிருக்கும்னும் இப்போ வந்தது நல்லதுன்னு சொல்லி எண்ண,வேட்டி எல்லாத்துக்கும் பணம் வாங்குனாரு. இத்தனைக்குள்ள விடிஞ்சிருச்சு, ஒரு ஆட்டோ புடிச்சு மேரிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க .
மேரிக்கு காலு சரியாச்சு, வீட்டுக்கு வந்தப்புறம் ஒன்னொண்ணையும் அசை போட்டு தோமா வின் மேல் ஒரு அபிப்ராயம் வந்திருந்தது அவளுக்கு . போட்டிருந்த கட்டோட அவ மனசும் இளகிடுச்சு.அப்புறம் என்ன?....அதே தான் "லவ்வு"....திருச்சபையில் கல்யாணம், மத்தியான சாப்பாட்டுக்கு ஆடு, கோழி ரெண்டும் போட்டு "ரெபாக்கா"வும் "பெராக்கா"வும் ஒண்ணாவே சாப்பிட்டு...இதோ இப்போ தோமாவும் மேரியும் சேர்ந்து தண்ணிக்குப் போயி கடைசி நடை முடித்து சாயங்காலம் சைக்கிள உருட்டிட்டு ரெண்டு பேரும் வரும்போது தாயம் போட்டு, ஈரஞ்சு, மூவாறு, பன்னிரண்டு ன்னு பெய்ய ஆரம்பிச்சது மழை.....
No comments:
Post a Comment